SK
ஜனவரி 14 2005:

அன்று பொங்கல். நான் இந்தியாவில் இருந்து ஜெர்மனி வந்து நான்கு மாதம் கூட முழுமை அடியாத நேரம். இந்தியாவில் பொங்கல். 2005 'இல் இப்போ உள்ளது போல இந்தியாவிற்கு பேச voip வசதி இல்லை. பேசுவதற்கான அட்டை வாங்கி, தொலைபேசியில் இருந்து அழைத்து பேச வேண்டும். நான் இருந்த ஊர், முன்னாள் கிழக்கு ஜெர்மனி பகுதியை சேர்ந்தது. அன்று இந்தியாவிற்கு தொலைபேச தனியாக நகர மத்திய பகுதிக்கு சென்று இருந்தேன்.

தொலைபேசுவதர்க்கு கடையில் நுழைந்தும் விட்டேன். ஆனால் அங்கு செல்லும் போதே ஒரு வித சலசலப்பு இருப்பதை உணர முடிந்தது. நான் கடையில் நுழைந்த பத்து நிமிடத்தில் எல்லாம் அந்த பகுதியே ஒரு போர்க்களம் போல காட்சி தந்தது என்றால் அது மிகையே இல்லை. அன்று, உலகப்போரில் கிழக்கு ஜெர்மனி பகுதியின் மீது குண்டு வீசப்பட்டதின் நினைவாக வலது சாரிகள் (Neo -Nazi 's) ஒரு ஊர்வலம் நடத்துவது பிறகு தான் தெரிந்தது. அவர்கள் நடத்தும் ஊர்வலத்துக்கு எதிராக இடது சாரிகள் இன்னொரு திக்கில் இருந்து ஊர்வலம் நடத்துகிறார்கள். இரண்டுக்கும் நடுவில் போலீஸ். புகை குண்டு வீச்சும், பீர் பாட்டில்களால் அடியும், துப்பாக்கி சூடும், கண்ணீர் புகையும், அனைவரும் அனைவரையும் அடித்து கொண்டு இருந்தார்கள். எனக்கு நேரடியாக 'பாம்பே' படம் பார்த்த ஒரு பீலிங்க்ஸ் வந்தது. இது எல்லாம் அடங்குவதற்கு இரண்டு மணி நேரம் பிடித்தது. இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த எனக்கு, ஒரு வித பீதி இருந்தது என்று நிச்சயம் சொல்லியே ஆக வேண்டும்.

இந்த ஒரு நிகழ்ச்சியின் தாக்கம், ஜெர்மனியை விட்டு கிளம்பி விடலாமா என்று கூட யோசிக்க வைத்தது. மேலும், நான் முன்பு இருந்த ஊர் மீது ஒரு பயம், பயம் கலந்த வெறுப்பு இன்று வரை உள்ளது. இந்த நினைவுகள் மட்டும் என்னுள் இருந்து கொண்டே இருந்தது. இருக்கிறது. இதனாலேயே நான் அந்த ஊரில் எனக்கு தேவையான இடங்களை தவிர வேறு எங்கும் சென்றது கூட இல்லை என்று சொல்லலாம். ஜெர்மனியில், ஐரோப்பாவில் பல இடங்களுக்கு நான் சுற்றி இருந்தாலும், அந்த ஊரில் சுற்றுலா பயணிகளுக்கு என்று உண்டான இடங்களுக்கு நான் சென்றது இல்லை.

சரி இதை என் இப்போ சொல்றே ??

மே 1 :

உழைப்பாளர்கள் தினம். பெர்லின் நகரில் இந்த தினம் ஒரு சிறப்பு உண்டு. இது காலம் காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆம். நான் மேலே அனைத்தும், ஜேர்மன் மக்களும், போலிசும் ஒத்திகை பார்க்கும் நாள் இது. அது என்ன கருமமோ, வருடா வருடம் இந்த காட்சிகள் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன. மேலும் விவரம் அறிய ஆசை உள்ளவர்கள், யு tube சென்று, 'Berlin , Kreuzberg , may 1' என்று தந்து அனைத்து கண்கொள்ளா காட்சிகளையும் பார்த்து கொள்ளவும்.

இதோ இன்று மெட்ரோவில் வரும் போது, 6000 போலீஸ் கொண்ட படை ஜெர்மனியில் குவிக்கப்பட்டு உள்ளதாக செய்தி படித்தேன். ஆகவே பெர்லின் இருக்கும் நண்பர்கள், நாளை பின் நேரத்தில், Kreuberg , prenzlauer berg போன்ற பகுதியை தவிர்த்தல் நலம்.

அன்புடன்
எஸ். கே.