SK
பொங்கலுக்கு அம்மாவிடம் போனில் பேசும் போது

'ஹலோ அம்மா, நான் இந்த சனி ஞாயிறு ஸ்டாக்ஹோம் போறேன். ஆமா ரெண்டு நாள் தான்'

'சரி பத்திரமா போயிட்டு வா. அங்கே என்னடா நல்ல இருக்கும். ஏதாவது நினைவா வாங்கிட்டு வா'

'சரிம்மா. திரும்பி வந்த அப்பறம் பேசறேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்னுடைய ஜேர்மன் கிளாசில்.

'இந்த சனி ஞாயிறு ஸ்டாக்ஹோம் போறேன். அங்கே என்னது நல்லா இருக்கும்'

அனைவரும் ஒரு மனதாக சிரித்து கொண்டே, Blonde Girls.

அஆஆஹா அம்மா சரியா தான் சொல்லி இருக்காங்க. நான் வேற அம்மா சொல்லை தட்டாத பிள்ளை ஆச்சே. சரி விடு எப்புடி இருக்குனு போயி பாத்துடலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பனியினால் உறைந்த ஆறுகள், ஏரிகள். மூன்று தீவுகளை இணைத்து ஒரு நகரம். பழைய கட்டிடடங்கள், அமைதியான சாலைகள், எங்கும் பனி, நெரிசல் இல்லாத நகரம். இன்னும் அப்படியே நினைவில். மீண்டும் செல்ல வேண்டும் என்ற நினைவு எப்போதுமே மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. சிரித்த முகத்துடன் அனைவரும், ஒரு தோழமையை கொண்ட பேச்சு. நண்பர்கள் சொன்ன போல புள்ளைங்கள பத்தி சொல்லவே தேவை இல்லை. எனக்கும் பின்னணியில் ஒரு பாட்டு ஓடிகிட்டே இருந்தது, 'கட்டுனா உன்னைய கட்டனுண்டி' அப்படின்னு. ம்ம்ம் என்ன பண்ண. இல்லை இல்லை... எனக்கு இல்லை. சொக்கா. சொக்கா'.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மிகவும் புகழ் பெற்ற சிட்டி ஹால் எனப்படும் இடத்திற்கு சென்றோம். அங்கு தான் நோபிள் பரிசு கொடுத்தவுடன், இரவு விருந்தும், அனைத்து விருந்தினர்களும் டான்ஸ் ஆடும் இடமும் உள்ளது. அதாவது அது ஸ்டாக்ஹோம் நகரத்திற்கான பார்லிமென்ட் அப்படின்னு வெச்சுகோங்க. அதை ஒரு டூரிஸ்ட் கைடுடன் சுத்தி பாத்தோம். ஒரு பெரிய நீண்ட அரை. அங்கு சுவரில் அழகான ஓவியம். அதனருகே இரண்டு தூண்கள். ஒன்று மொழக்கட்டினு வழ வழன்னு இருந்தது, இன்னொன்னு எட்டு பக்கங்களை கொண்ட ஒரு தூண். அந்த எடத்துல அவர் விளக்கம் தர்றாரு.

'இங்கே என் இந்த ரூம் புல்லா ரெண்டு தூண் வெச்சு இருக்காங்க தெரியுமா ?'

'தெரியாது' இது நாங்க.

'ஆணையும் பொண்ணையும் போல தான் இந்த ரெண்டு தூணும்'

'ஓஹோ'

'இது எது ஆண் தூண். எது பெண் தூண். சொல்லுங்க. எப்படி கண்டு புடிப்பீங்க'

'தெரியலையே.'

'இங்கே இதோ மொழு மொழுன்னு இருக்கு இல்லையா. அது ஆண் தூண். ஆண் மூளை வேலை செய்யறா போல. ஒன்னே ஒன்னு தான் யோசிக்கும்'

'ஓஹோ'

'இந்த எட்டு பக்கம் வெச்சு இருக்கு இல்லையா. அது பெண் தூண். ஒரு நிமிசத்துல எட்டு விதமா யோசிக்கும். எப்போ என்ன மாறும்னு யாருக்குமே தெரியாது'

'ஆஹா, உங்க ஊரு ஆட்கள் ஞானியா' (இது நான் மனதுக்குள்).
'உங்க ஊருலயும் இப்படி தானா.' நான் அவரிடம்.

'அது யுனிவர்சல் கண்ணு' பின்னாடி இருந்து ஒரு அனுபவஸ்தர்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நோபல் முசீயம் போய இருந்தோம். அண்ணன் வெங்கடராமன் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு செய்தி. 'அண்ணே. அங்கே உங்களை இந்தியன்னு போட்டு இருக்கு. அது என்னனு கொஞ்சம் கவனிங்க. பயபுள்ளைங்க மேல ஒரு கேஸ் போடுங்க சொல்றேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஸ்டாக்ஹோமில் இருந்து ஹெல்சிங்கி வரை, 18 மணி நேரம் செல்லும் கப்பல் பயணம் செல்ல முடியவில்லை. இதுக்காகவும், அப்பறம் முன்னமே சொன்ன அம்மணிகளை திரும்ப பாக்கறதுக்காகவும் இன்னொரு முறை ஸ்டாக்ஹோம் போயே தீரணும்னு இருக்கேன். ஹி ஹி ஹி.

அன்புடன்
எஸ். கே.
SK
என்னோட பன்னிரெண்டாவது டியூஷன் வாத்தியார் சின்ன சின்ன நகைச்சுவை துணுக்கும், விடயங்களும் சொல்லிக்கொடுப்பார். அந்த டியூஷன் படிக்கும் போது உட்கார இருக்கிற எடத்துக்கு மேல மாணவர்கள் இருப்பாங்க. நெருக்கிகிட்டு தான் ஒக்காந்து இருப்போம். இப்படியே உட்காந்து இருக்கறது கஷ்டமா இருக்கவே, ஒரு நாள் ஒரு பையன் அவர் கிட்டே,

'சார், ஒட்கார எடம் பத்த மாட்டேங்குது. ஒரு பெஞ்ச் அதிகமா இருந்தா நல்லா இருக்கும்'
அப்படின்னு சொன்னான். அதுக்கு ஒடனே அவரு,
'ஒரு வாரம் பொறுத்துக்க தம்பி' அப்படின்னு பதில் சொன்னாரு.
இவன் திரும்பி (திரும்பின்னா திரும்பி இல்லீங்க, மீண்டும் அவரிடம்)
'ஏன் சார், ஒரு வாரத்துல புது பெஞ்ச் வருமா' அப்படின்னான். அவர் சிரிச்சுகிட்டே,
'இல்லை தம்பி, இதுவே உங்களுக்கு பழகிடும்' அப்படின்னு சொன்னாரு?

:-) இது தான் உண்மை. எல்லாமே பழகி போயிடும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சில விடயங்களை நாம் தினமும் குறிப்பிட்ட காலங்களுக்கு செய்து பழகும் போது, அதுவே பழக்கம் ஆகிவிடுகிறது. இதை பற்றி பல ஆராய்ச்சிகளும் செய்து உள்ளார்கள். முதன் முதலாக ஆராய்ச்சியாக மக்ஸ்வெல் மல்ஸ் என்பவர் இவ்வாறு ஒரு விடயம் பழக்கமாக மாறுவதற்கு இருபத்தி ஒன்று நாட்கள் தேவை என்று கூறியுள்ளார். இதை பற்றி பல குறிப்புகளும் உள்ளன. சிலர் 66 நாட்கள் தேவை என்றும் கூறி உள்ளனர். எந்த விடயமும் சில நாட்கள் தொடர்ந்தோ, சில முறை தொடர்ந்து நடக்கும் போது பழகி விடுகிறது. நல்ல விடயம் பழகுவதற்கு அதிக நாட்களும், கெட்ட விடயம் பழகுவதற்கு குறைந்த நாட்களும் தேவை படுகிறது. நல்லது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
போன மாசம் வரைக்கும் இந்த பனிக்காலம் எப்படி இருக்குமோ அப்படின்னு ஒரு பயம் இருந்திச்சு. டிசம்பர் கடைசி வாரம் ஒரு சனி ஞாயிறு -15 போச்சு. அப்போ கொட்ட ஆரம்பிச்ச பனி கொட்டுது கொட்டுது கொட்டிகிட்டே இருக்கு. இப்போ தினமும் -3 , -4 தான். இதுக்கு எல்லாம் இப்போ நாங்க யோசிக்கறது இல்லை. ஏன்னா, பழகிப்போச்சு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
போன வாரத்துல இருந்து ஒரு செய்தி. ஒரு போலீஸ் அதிகாரிய வெட்டி இருக்காங்க. அதை மினிஸ்டர் எல்லாம் பாத்து இருக்காங்க. உதவி ஏதும் செய்யலை. இன்னும் தமிழ்நாட்டு அரசு கிட்டே இருந்து எந்த வித அறிக்கையோ, வேலை நேரத்தில் உயிர் இழந்த போலீஸ் அதிகாரிக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையோ எடுக்கலை. குறிப்பா முதல் அமைச்சர் கிட்டே இருந்து எந்த பதிலும் வரலை.
எனக்கு இதை கேட்ட ஒடனே சிரிப்பு சிரிப்பா இருந்திச்சு. என்னவோ ஜக்குபாய் படம் நெட்ல வந்துட்ட மாதிரியும், 'அப்பாஆஅ' (சித்தி மாதிரி படிக்கவும் ) அப்படின்னு கூப்பிடற ராதிகா அவர்கள் அழுவுற மாதிரியும், இல்லை பயபுள்ளைங்க குதிக்கறாங்க. போனது ஒரு போலீஸ் உசுரு. நீங்க எல்லாம் வேலைக்கு சேரும் போது அதுக்கு தானையா சேந்தீங்க. நாங்க திருட்டு வி. சி. டி. ஒழிக்கரதுல பிசியா இருக்கோம். நீங்க பாட்டுக்கு உசுரு போச்சு, ம... போச்சு அப்படின்னு வந்து சொன்னா. எங்களுக்கு குஷ்புவின் அழகான தமிழில் தொகுத்து வழங்கி நமிதா டான்ஸ் ஆட நடக்கும் கலை விழா பாக்க வேண்டியது வேற பாக்கி இருக்கு. சின்ன புள்ளைத்தனமா கூவிக்கிட்டு.

இதுவும் பழகி போச்சு தலைவா. அடுத்த ரஜினி படம் வந்திட்டா எங்களுக்கு அது போதும். எவன் உசுரு போனா எனக்கு என்ன.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாள் 1 : ருசிகா என்ற மாணவி 19 வருடத்துக்கு முன் ஒரு போலீஸ் அதிகாரியால் மானபங்க படுத்த பட்டு உள்ளார். அதை குறித்த அறிக்கை.
நாள் 2 : ஏன். டி. திவாரி சில பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக வீடியோ வெளியானது. அதை பற்றிய ஒரு ஆய்வு (??) அறிக்கை.
நாள் 3 : ஹைதராபாத்தில் கலவரம். ஒரு செய்தி சானல் ராஜசேகர் ரெட்டி மரணத்தை குறித்த தவறான செய்தி வெளியிட்டதால் கலவரம்.
நாள் 4 : ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் உடன் சண்டை.
நாள் 5 : இது போல உணர்ச்சி மிக்க செய்தி இல்லை..

நம்ம பொதுசனம் : என்ன அண்ணே, இன்னைக்கு ஒன்னும் சுவாரஸ்யமா செய்தி இல்லையா. சுவாரஸ்யமா செய்தி படிச்சே பழகி போச்சு அண்ணே.

வாழ்க பொதுசனம்.
வாழ்க பாரதம்.
வாழ்க அரசியல் வாதிகள்.
வாழ்க நமது ஜனநாயகம்.

'நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்'

என்றென்றும் அன்புடன்
எஸ். கே.