SK
நான் இருப்பது பெர்லின். பெர்லின் இந்த ஆண்டு 2009 பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளை கொண்டாடுகிறது . முடிந்தால் இந்த வரலாறை பற்றி பின்னொரு நாளில் எனக்கு தெரிந்தவற்றை எழுதுறேன்.

இந்த சுவர் இடிக்க பட்ட அன்று மற்றும் அந்த ஆண்டில் இங்கு நிலவிய ஆனந்தம் சொல்லி விவரிக்க முடியாது. அது இங்கே உள்ள படங்கள் மற்றும் ஒளிநாடாக்களை பார்க்கும் போது தெரியும். கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி இருந்த பிரிவினைகள், இதனால் வாடிய குடும்பங்கள், சுவர் இடித்த பிறகு இணைந்த குடும்பங்கள் அவர்களின் நிலையை கேட்கும் பொழுது மிக சந்தோஷமாகவும் ஒரு வித திருப்தியும் நமக்குள்ளே தானாக வரும். இன்னும் கிழக்கு பகுதியில் உள்ள இடங்கள் மேற்கு பகுதியில் உள்ள இடங்களை போல் 100% இல்லை எனினும் அதற்குரிய அனைத்து வேலைகளும் நடக்கின்றன.

மேற்கு பகுதியில் வாழ்கின்ற மக்கள் இன்றும் தங்களது சம்பளத்தில் ஒரு பகுதி கிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு தந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அது கட்டயாமாக அவர்களது சம்பளத்தில் இருந்து சென்று விடும். இதை பற்றி பல் வேறு கருத்துக்கள் நிலவினாலும் கிழக்கு பகுதியில் உள்ள மாநிலங்களை வளர்க்க இது மிகவும் உதவியாக உள்ளது. வளர்ச்சி பெற்றும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுவர் இடிக்கப்பட்ட இந்த இருபது வருடத்திற்கு பிறகு அவர்கள் ஒரு ஒருங்கிணைந்த ஜெர்மனியில் வாழ்கிறார்கள். இது அவர்கள் மனதிலும் உள்ளது. இங்கே உள்ள சான்சிலர் திருமதி. மெர்கெல் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு ஏதோ குறிப்பிடுகையில் கிழக்கு ஜெர்மனி என்று குறிப்பிட போய் எதிர் கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் அவரை கிழித்து தொங்க போட்டு விட்டார்கள். அவர்களுக்குள் அந்த பாகுபாடு மிகவும் குறைவு. இல்லை என்று சொல்ல முடியாது. குறிப்பாக தெற்கு பகுதி மக்கள் பாயர்ன் எனும் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அரசியல், விளையாட்டு போன்று எல்லாவற்றிலும் மிகவும் ஆளுமை உடையவர்கள். அவர்களுக்கு அவர்கள் மாநிலத்தை பற்றிய ஒரு தற்பெருமை உண்டு எனவும் சொல்லலாம். அது ஒரு தனி கதை.

எந்த அளவிற்கு மாற்றம் என்றால், 'நீங்க எந்த ஊரை சேர்ந்தவர்?' என்று கேட்கும் பொழுது 'நான் பழைய இந்த ஜெர்மனி' என்று எவருமே குறிப்பிடுவது இல்லை. நான் இந்த ஊர், இந்த மாநிலத்தில் உள்ளது என்றே கூறுவார்கள். அவர்கள் மனதில் 80% மேல் அந்த பிரிவினை இல்லை எனவும் கூறலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்ற வாரம் ஒரு விருந்துக்கு சென்று இருந்தேன். அங்கு மகாராஷ்டிரத்தை சேர்ந்த நண்பர்கள் வந்து இருந்தார்கள். ஒரு நண்பர் என்னை அவரது நண்பரிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். 'இவருடைய பெயர் குமார், இவர் சவுத் இந்தியன்'.

இது அவர் மட்டும் அல்ல நம் மக்களும் 'நார்த் இந்தியன் மச்சான் அவன்' என்றே அறிமுகம் செய்கிறார்கள்.

'வோ மதராசி ஹாய் சாலா', ' அவன் ஹிந்தி காரன் மச்சான்' என்பது பேச்சு வழக்கு.

தென் இந்தியா, வட இந்தியா என்ற நாடுகள் எங்கே இருந்து வந்தன ?? ஏன் அப்படி சொல்லி பழக வேண்டும். 'என்னை நீங்கள் எங்கிருந்து வருகுறீர்கள் என்று கேட்டால், நான் இந்தியா, இந்தியாவில் தமிழ்நாடு, அது தெற்கு பகுதியில் உள்ளது என்று தான் அறிமுகம் செய்துகொண்டு பழக்கம்.

இப்படி சொல்வதனால் என்ன ? உடனே பிரிவினை ஆகிடுவோமா என்று கேட்கும் நண்பர்களுக்கு ஒரு உதாரணம்.

புனேவை சேர்ந்த ஒரு நண்பரிடம் ஒரு மாணவனுக்கு தேவையான உதவி குறித்து விளக்கி கொண்டு இருந்தேன். அவர் பதிலுக்கு 'நான் என்னுடன் வேலை பார்க்கும் ஒரு தோழரை அறிமுகம் செய்து வைக்கிறேன், அவரிடம் பேசுங்கள். அவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்' என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார். இது குறிப்பிட்டு கூறும் அளவுக்கு இரண்டு மூன்று முறை நடந்தது. அதாவது ஒரு தமிழ் மாணவனுக்கு உதவி என்றால் அதை ஒரு தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான் செய்ய வேண்டுமா ??


முன்னே சொன்னதில் கல்லால் ஆன சுவர் இருந்தது, இடிக்கப்பட்டது, இல்லாமல் போனது. பின்னே சொன்னதில் கண்ணுக்கு தெரியாத சுவர் ஒன்று இருக்கிறது. இடிக்க முடியுமா ??

கற்சுவரை இடிக்கலாம். மனச்சுவரை இடிப்பது மிக கடினம்.

என் புரிதலில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டிகாட்டுங்கள்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்ற வாரம் ஒரு டாகுமெண்டரி பார்க்க சென்று இருந்தேன். இந்தியா - பாகிஸ்தான் பற்றிய தொகுப்பு அது. முடிந்தால் அந்த டாகுமெண்டரி பற்றியும், விவரம் பற்றியும் பின்னர் எழுதுறேன். அந்த டாகுமெண்டரி பார்த்த பிறகு கூட்டத்தில் இருந்து ஒரு ஜெர்மன் கேட்டார், 'ஏன் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையான இந்த கதவை உடைத்து மீண்டும் ஒரே நாடாக மாற கூடாதா ??' என்று. என்ன பதில் சொல்லன்னு சொல்லிட்டு போங்க மக்கா.

அன்புடன்,
எஸ். கே.
SK
வணக்கம் மக்கா..  

மே பத்து அன்று நிகழ்ச்சி நல்லபடியா நடந்து முடிந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. நன்றி எத்தனை முறை சொன்னாலும் தகும். இங்கே இருந்து ஒரு மெயில் அனுப்பறதும், தொலை பேசறதும் எளிது. அங்கே இருந்து ஒரு காரியத்தை செய்யறது எவ்வளவு கடினம்னு எனக்கு தெரியும். அதை சாதித்து காட்டிய தோழர்கள் நரசிம், லக்கிலுக், அதிஷா, முரளிகண்ணன், கார்க்கி, அமித்து அம்மா, ரம்யா.. மற்றும் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி. இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும் என்று நம்புவோம். தொடரனும். தொடருவோம். தொடரும்.  

மேலும் உடனடியாக விரிவாக பதிவிட்ட நர்சிம், திரு. ராகவன், லக்கிலுக், திருமதி முல்லை, ஆதி, அக்னிபார்வை, படங்களும் இட்ட ஜாக்கி சேகர்... அனைவருக்கும் நன்றி. டாக்டர் ஷாலினி மற்றும் டாக்டர் ருத்ரன் அவர்களுக்கும் நன்றி. நேரம் ஒதுக்கி, பொறுமையாக ஒவ்வொரு கேள்விகளுக்கும் விளக்கம் அளித்தமைக்கு. மேலும் இடம் மற்றும் ஏற்பாடுகளுக்கு உதவிய திரு. பத்ரி அவர்களுக்கும் நன்றி.  

சரி நன்றி சொன்னது எல்லாம் போதும். இதை எழுதும் பொது நடிகர் திரு. கமல் அவர்கள், 'சென்னை - 28' படத்தோட நூறாவது நாள் நிகழ்ச்சில பேசினது தான் நினைவுக்கு வந்தது. 'இந்த வெற்றிவிழா கொண்டாட்டும் ஒரு புறம் இருக்கட்டும். நீங்க அடுத்த படத்துக்கு வேலை ஆரம்பிங்க. உக்காந்து எல்லாரும் பாராட்டி பேசிகிட்டு இருந்தா அடுத்த வேலை நடக்காது. ...' :) அதே தான். நாமும் அடுத்து என்ன அப்படிங்கறதை தான் யோசிக்கணும்.  

சில உதவிகள் :  

1. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ஷாலினி மற்றும் டாக்டர் ருத்ரன் கூறியவற்றையும், கேள்வி பதிலையும் எளிமையாக, அனைவரும் அதாவது உங்க பக்கத்து வீட்டு அம்மா, அப்பா இவங்க எல்லாரும் புரிஞ்சுக்கற மாதிரி முடிந்தால் எளிமையான உதாரணங்களுடன் இரண்டு அல்லது மூன்று பக்க கோப்பாக தயார் செய்தால் உதவியாக இருக்கும். இதையே தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் செய்தால் மிக நல்லது. இதற்கு நேரம், பொறுமை, மற்றும் எண்ணம் உள்ளவர்கள் பின்னூட்டத்தில் தெரியபடுத்தவும். திரு. ராகவன், மற்றும் திரு. அக்னிபார்வை பதிவுகளை படித்து சின்ன சின்ன விடையங்களை நினைவு கூர்ந்து எழுதலாம்.  

2. இந்த நிகழ்ச்சியை பற்றி உங்கள் தோழிகள் மற்றும் தோழர்கள் இடத்தில் பீதி அடையாமல் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பேசுங்கள். பின்னொரு நேரம் குறிப்பிட்ட அளவு நண்பர்கள் இருக்கும் பட்சத்தில் மீண்டும் இதே போல ஒரு நிகழ்ச்சியை சென்னையில் ஏற்பாடு செய்ய முயற்சி செய்யலாம். மேலே நாம் தயார் செய்யும் கோப்பை அவர்கள் படித்து, மேலும் அவர்கள் தங்களுடைய கேள்விகளை இணைக்கும் பட்சத்தில் இன்னும் நிறைய அறிந்து கொள்ள வாய்ப்பு இருக்கு. மேலும் டாக்டர் ருத்ரன் அவர்களும், இது போல ஒரு நிகழ்ச்சி குறித்து மகிழ்ச்சியும் மேலும் நடத்தவும் ஊக்கமும் தந்துள்ளார். அதே போல் டாக்டர் ஷாலினி அவர்களும் நிகழ்ச்சி நிறைவாக இருந்ததாகவும் மெயில் செய்துள்ளார்.  

3. ஒரு நிகழ்ச்சி நடக்கும் பட்சத்தில் நிறைகளை கூறி பாராட்டுவதை போல நீங்கள் இதை மாற்றி இவ்வாறு செய்து இருக்கலாம் அப்படின்னு உங்களுக்கு எதாவது தோணிச்சுன்னா நண்பர் திரு. லக்கிலுக் கூறியது போல எங்களுக்கு மெயில் அனுப்புங்கள். அது எதிர் காலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை செய்ய உதவியாக இருக்கும். மெயில் முகவரி : weshoulddosomething@gmail.com  

4. அடுத்து என்ன ?? : இது தான் ஒரு பெரிய கேள்வி. நண்பர் திரு லக்கிலுக் சொன்னது போல இப்படி செய்யலாம். அப்படின்னு தோன்றதை எங்களுக்கு எழுதுங்க. நாமும் அதை எப்படி செய்யலாம்னு யோசிச்சு இந்த நிகழ்ச்சி போல செய்யறதுக்கு முயற்சி பண்ணலாம். இதை பற்றி எழுத மெயில் முகவரி : weshoulddosomething@gmail.com

பரிசல் : பிறந்த நாள் வாழ்த்துக்கள்.  

என்ன எழுதன்னு கேட்டு இருந்தீங்க ? ஒரே ஒரு உதாரணம் சொல்றேன். இந்த நிகழ்ச்சி நடக்கறதுக்கு மெயில் அனுப்பும் பொது கேட்டு இருந்தோம். இது பற்றிய செய்தியை எங்க படிச்சீங்கன்னு. 'பரிசல் பதிவுல பாத்தோம் அப்படின்னு' மூணு நாலு பேருக்கு மேல எழுதி இருந்தாங்க. அது தான் உங்க எழுத்தின் வீச்சு. இதுக்கு தான் நீங்க எழுதணும். நான் எல்லாம் எழுதினா என்னாலையே ரெண்டு நாள் கழிச்சு திரும்ப படிச்ச சகிச்சுக்க முடியலை. கோபம், விரக்தி , வருத்தம், எதுனாலும் .. எழுதுங்க.. எழுதுங்க.. அதுனால செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கு.  

பதிவு நீண்டு கிட்டே போகுது. அதுனால இத்தோட நிறுத்துக்கறேன். இதே நிகழ்ச்சியை பத்திய இன்னொரு பதிவு வரும் விரைவில். உங்களுடைய பதில் பின்னோட்டம் மூலமாகவோ, மெயில் மூலமாகவோ தெரியபடுத்தவும்.  

அன்புடன்,
எஸ். கே.

பி. கு. : தேர்தல் நாளும் அதுவுமா தைரியமா பதிவு போடறேன். மக்கா ஈ ஆட விட்டுடாதீங்க. சரியாக பதிவர்களிடம் சென்று சேரவில்லை எனில், உங்கள் பதிவில் எழுதியோ, மேலே சொல்லப்பட்ட சில உதவிகள் செய்தால் மிகவும் எளிதாக இருக்கும். 

பி. கு. 2: பரிசல், உங்க பேரு போட்டாலாவது தேர்தல் நாளும் அதுவுமா போனி ஆகுதான்னு பாக்கறேன். :) 

பி. கு. 3: மறந்துடாம ஓட்டு போடுங்க மக்கா. இன்னைக்கு தேர்தலாமே.